×

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் தயாரித்த 2 நிறுவனங்களுக்கு சீல்: கலெக்டர் தகவல்

 

திண்டுக்கல், அக். 21: திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் தயாரித்த 2 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டது என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: வனத்துறை, மாசு கட்டுப்பாடு வாரியம், மாவட்ட நிர்வாகம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் தடையினை செயல்படுத்தி வருகின்றது.

இவற்றில் பிளாஸ்டிக் கைப்பைகள் மற்றும் நெய்யப்படாத கைப்பைகளின் தடையினை அளவு மற்றும் தடிமன் வரையறையின்றி, தீவிரமாக செயல்படுத்தி வருகின்றது. தடையாணையில் குறிப்பிட்டுள்ளபடி பாலிஎதிலீன் டெரிப்தாலேட், உயர் அடர்த்தி பாலிஎதிலீன், வினைல், குறைந்த அடர்த்தி பாலிஎதிலின், பாலிப்ரோப்பிலின், பாலிஸ்டைரீன் ரெசின்கள் போன்ற அதிக மூலக்கூறு எடை கொண்ட பாலிமரில் இருந்து தயாரிக்கப்பட்டு சுயமாக எடுத்துச் செல்லும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் கைப்பைகள், உபயோகிப்பதற்கும், கையாள்வதற்கும் கடுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பைகள் தயாரிப்பு மற்றும் பயன்பாட்டை கட்டுப்படுத்த மாவட்டத்தில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் வட்டம் குளத்துார் கிராமம் மற்றும் ஆத்துார் வட்டம், பித்தளைப்பட்டி கிராமம் ஆகிய இடங்களில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆய்வின் போது, தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கும் இரண்டு நிறுவனங்கள் கண்டறியப்பட்டு அவ்விரு நிறுவனங்களுக்கும் சீல் வைக்கப்பட்டது. மேலும் இந்த நிறுவனங்களின் மின் இணைப்பை துண்டிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது, என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் தயாரித்த 2 நிறுவனங்களுக்கு சீல்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Tamil Nadu government ,Dindigul district ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் மாவட்டம், கனமழை...